English

English

Tuesday, 23 April 2024

Book Day 📖

 பால்ய பள்ளி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்த நேரம் அது. என்னை அப்பள்ளியில் சேர்த்துவிட்ட விஜயன் மாமா வீட்டிற்கு அவ்வப்போது சென்று வருவேன் சில சமயங்களில் மதிய உணவு அங்கு உண்பேன் அவர் எப்பொழுதும் படிக்கும் ராஜேஷ்குமார் நாவல்கள் வைத்திருப்பார் அதை நான் பார்ப்பேன் அது என்ன புத்தகம் மாமா நான் படிக்க வேண்டும் என்று கேட்டேன் ஆனால் அவரோ பாடப் புத்தகத்தைப் இப்பொழுது படி மாப்பிள்ளை என்று சொல்லிவிடுவார் ஆனால் ஒரு நாள் ஆர்வ மிகுதியில் நான் அந்த புத்தகத்தை அவருக்கு தெரியாமல் எடுத்து படிக்க ஆரம்பித்தேன் ராஜேஷ்குமாரின் நாவல்கள் திகில் நாவல்கள் என்பது உங்களுக்கு தெரியும் நான் படித்த இந்த நாவலும் திகிலாக இருந்தது . படித்ததும் கதை விறுவிறுப்பாக ஆர்வம் அதிகமாகியது மாமா வைத்திருந்த பெரும்பாலான ராஜேஷ்குமார் நாவல்களை அவருக்கு தெரியாமல் படிக்க ஆரம்பித்தேன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நிலையில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட ராஜேஷ்குமார் நாவல்களை படித்து இருப்பேன் நான் புத்தகம் படிக்கும் பழக்கம் அப்போது தான் தொடங்கியது. பிறகு பள்ளியில் உள்ள நூலகத்தில் அதுபோன்ற புத்தகங்களை தேடினேன் ஆனால் அந்த புத்தகங்கள் இல்லை அதனால் ஊரக நூலகத்திற்கு சென்றேன் அதுபோன்ற புத்தகங்களை தேடினேன் அங்கும் ராஜேஷ்குமார் நாவல்கள் கிடைக்கவில்லை ஏழாம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் அப்பா விக்ரமாதித்தன் & தெனாலிராமன் கதைகள் புத்தகத்தை வாங்கி வந்தார் அது நன்றாக இருந்தது. அதற்குப்பிறகு எட்டாம் வகுப்பில் பொது நூலகத்தில் உள்ள நியூஸ் பேப்பர் களுடன் வரும் சிறுவர்மணி , சிறுவர் மலர் , வாரமலர் போன்ற புத்தகங்களில் வரும் தொடர்கதைகளும் சித்திரக்கதைகளையும் தொடர்ந்து படித்து வந்தேன் அதுவும் என் புத்தகப் படிப்பிற்கு அடிப்படையாக அமைந்தது, பிறகு ஒன்பதாம் வகுப்பில் பள்ளி நூலகத்தில் இருந்த சில புத்தகங்களை எடுத்து படித்தேன் அவற்றில் முக்கியமாக ராமாயணம் மகாபாரதம் ஆகும் இந்த புத்தகங்களை எனது  ஆசிரியர் படிக்கச் சொன்னார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பதால் பாடப்புத்தகத்தில் கவனம் செலுத்தினேன் பதினொன்றாம் வகுப்பில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டியில் முதலிடம் பெற்றதால் பரிசாக நான்கு புத்தகங்களை வழங்கினார்கள் அதில் ஒன்றான “அக்னி சிறகுகள்” படித்தேன். அய்யா அப்துல் கலாம் எழுதிய அந்த நூல் என்னை ஆட்கொண்டது என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பன்னிரண்டாம் வகுப்பு வெற்றிகரமாக முடித்ததால் என் தாத்தா எனக்கு அகிலன் எழுதிய "வேங்கையின் மைந்தன்" புத்தகத்தை பரிசளித்தார். விடுமுறை முழுவதும் அதை படிக்கவே நேரம் சரியாக இருந்தது. பள்ளிப்படிப்பிற்கு பிறகு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன். கல்லூரியின் நூலகம் மிக பெரிது தமிழ் வரலாற்று நாவல்கள் "பொன்னியின் செல்வன்"  5 பாகங்கள், "சிவகாமியின் சபதம் "போன்ற சிலவற்றை  நூலகத்திற்கு சென்று படித்தேன். இளங்கலை ஆங்கிலம் படிப்பதாலும் அதற்கு முன்னே அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்ததாலும் ஆங்கிலம் எனக்கு வராத நிலை இருந்தது. அதனால் சில  ஆங்கில நாவல்களை தேர்ந்தெடுத்து படிக்க ஆரம்பித்தேன் முதலில் புரியவில்லை பிறகு டிக்‌ஷனரி உதவியுடன் படிக்க ஆரம்பித்தேன்.இளங்கலை கல்வி பயிலும் போது பல பயோகிராஃபி நூல்களை படித்தேன் அவை எனக்கு உத்வேகத்தை தந்தது அதுமட்டுமின்றி மேலும் படிப்பதற்கான ஊக்கமும் தந்தது முதுகலை ஆங்கிலம் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்ததால் ‘கன்னிமாரா நூலகத்தையும்’, ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தை’ நன்றாக பயன்படுத்தினேன் அதுமட்டுமின்றி பார்ட் டைம் ஜாப்  சிட்டி சென்டரில் உள்ள லேண்ட்மார்க் புக் செக்க்ஷனில் வாங்கினேன் அங்கு மேலும் பல புத்தகங்களை படித்தேன், சென்னையில் படித்த அந்த இரண்டு வருடங்களும் அங்கு நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் வாலண்டீயராக பணிபுரிந்து டிஸ்கவுண்ட் இல் பல நூல்களை வாங்கினேன்.  முதுகலைப் படிப்பை முடித்தவுடனே போட்டி தேர்விற்கு பல புத்தகங்களை பாரிஸ் கார்னர் மற்றும் திருவள்ளிகேணி சாலைகளில் உள்ள செகண்ட் ஹேண்ட் புக் ஷாப்பில் வாங்கி படித்து தயார் செய்து படித்து இன்று நல்ல அரசுப் பணியில் உள்ளேன். பள்ளி பாட புத்தகங்கள் அல்லாமல் இன்று வரை ஏறத்தாழ முன்னூறுக்கும்  மேற்பட்ட புத்தகங்களை படித்து அவற்றை வீட்டில் வைத்துள்ளேன். புத்தகங்களைப் பற்றி நிறைய பழமொழிகள் உண்டு "நல்ல புத்தகம் ஒரு நல்ல நண்பனை போல" ஒரு புத்தகத்தை படித்தால் ஒரு வயது அனுபவம் கூடுகிறது , “தலை குனிந்து படித்தால் தலை நிமிரலாம்“ போன்றவை அதை நன்கு உணர்ந்தவன் நான் படிப்பு ஒன்றே என்னை ஒரளவிற்கு ஒழுக்கமாகவும், நல்ல சிந்தனையுடன் வளர்வதற்கும்,  நல்ல ஒரு சமூக இணக்கத்தோடு வாழ்வதற்கும் நன்னெறிப்படுத்தியது. ஆண்ட்ராய்ட் போன் இல்லாத நாட்களில் தான் நான் சிறந்த புத்தகங்களை படித்து இருந்தேன் என்பது உண்மை. புத்தகங்களைப் பற்றிய என் காதல் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை படிக்க கொடுங்கள் மாணவர்களிடையே புத்தகப் படிப்பை ஊக்குவித்து அவர்களை பாடப்புத்தகத்தோடு மற்ற நூல்களையும் படிக்க ஆர்வத்தை பெற்றோர்கள் அளிக்கவேண்டும், நண்பர்களுக்கு அன்பளிப்பாக நல்ல புத்தகங்களை படிக்க கொடுங்கள். 📚World Book Day 📖